திருச்சி அருகே பைக்கில் சென்ற காவலர் மயங்கி விழுந்து பலி!

 
trichy

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகே உள்ள பழையூர் மேடு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் ராமகிருஷ்ணன்(28). இவர் வாத்தலை காவல் நிலையத்தில் 2ஆம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று காலை 10.30 மணி அளவில் தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் காவல் நிலைய பணிக்கு சென்று கொண்டிருந்தார். திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் பெட்டவாய்த்தலை மில் கேட் பகுதியில் சென்றபோது திடீரென அவருக்கு மயக்கம் வருவது போல இருந்துள்ளது. இதனால் வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு இறங்கியுள்ளார்.

trichy

அப்போது, திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனை கண்டு அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். தகவலின் பேரில் பெட்டவாய்த்தலை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.