ஆத்தூர் அருகே சாலையில் சென்ற பார்சல் லாரி திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!

 
fire

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நெடுஞ்சாலையில் சென்ற பார்சல் லாரி திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் இருந்து சேலம் நோக்கி நேற்று பார்சல் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த பெத்தநாயக்கன் பாளையம் பேரூராட்சி அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென லாரியின் முன்புறம் கரும்புகை வெளியேறி உள்ளது. இதை கவனித்த ஓட்டுநர் உடனடியாக பார்சல் லாரி சாலையோரம் நிறுத்திவிட்டு, கீழே இறங்கினார். சிறிது நேரத்திற்குள் லாரி முன்புறம் தீப் பற்றி எரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள், இது குறித்து வாழப்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். 

salem

அதன் பேரில் வாழப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லாரியில் இருந்த பொருட்கள் ஏதும் சேதம் அடையவில்லை. இதனை அடுத்து, பார்சல் லாரியில் இருந்த பொருட்கள் மாற்று வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.