பைக்கில் சென்ற முன்னாள் ராணுவ வீரர் மீது திடீரென விழுந்த பனைமரம்!

 
mannargudi

மன்னார்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற முன்னாள் ராணுவ வீரர் மீது பனைமரம் முறிந்து விழுந்த சம்பவத்தில் அவர் பலத்த காயமடைந்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வ.உ.சி சாலையை சேர்ந்தவர் வெங்கடாஜலம். ஓய்வுபெற்ற ராணுவ வீரரான இவர் தற்போது கோட்டூர் அருகே உள்ள களப்பால் கிராமத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், வெங்கடாஜலம் நேற்று தனது வீட்டில் இருந்து திருமக்கோட்டை சாலை வழியாக களப்பால் நோக்கி சென்று கொண்டிருந்தார். மறவக்காடு என்ற இடத்தில் சென்றபோது சாலையோரத்தில் இருந்த பனைமரம் ஒன்று திடீரென வெங்கடாஜலம் மீது முறிந்து விழுந்தது.

mannargudi

இதில் அவர் பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வெங்கடாஜலம் மீது பனைமரம் முறிந்து விழுந்த சம்பவம் குறித்த சிசிடிவி கட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.