தக்கலை அருகே செவிலியர் மர்மமான முறையில் உயிரிழப்பு - போலீசார் விசாரணை!

 
kumari

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே செவிலியர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகேயுள்ள சாரோடு வெட்டுக்காட்டு விளை பகுதியை சேர்ந்தவர் சஞ்சய்குமார். இவரது மனைவி ரஜினிகாந்தி (34). இவர்களுக்கு குழந்தை இல்லை. ரஜினிகாந்தி, தனது கணவருடன் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தங்கி, அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், வெளிநாட்டில் வேலைக்கு செல்ல முடிவெடுத்த ரஜினிகாந்தி, பாஸ்போர்ட் எடுப்பதற்காக தனது சொந்த ஊரான சாரோடு வெட்டுக்காட்டு விளைக்கு வந்திருந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பாஸ்போர்ட் தொடர்பான பணிகளுக்காக வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த அவர், இரவு உணவை சாப்பிட்டு விட்டு அறைக்கு தூங்க சென்றுள்ளார். இந்த நிலையில், நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர் அறையில் இருந்து வெளியே வரவில்லை என கூறப்படுகிறது. 

thakalay

இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள், அவரது அறைக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது, ரஜினிகாந்தி படுக்கையில் மூச்சு பேச்சின்றி இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், இது குறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரஜினிகாந்தியின் உடலை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து ரஜினிகாந்தியின் சகோதரர் ஜெயசீலன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.