ஈரோடு அருகே தனியார் அறக்கட்டளை சார்பில் நவீன எரிவாயு தகன மேடை திறப்பு!

 
erode

ஈரோடு மாவட்டம் பாசூரில் தனியார் அறக்கட்டளை சார்பில் தொடங்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகனம் மேடையை எம்பி கணேச மூர்த்தி மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டம் பாசூரில் சங்கமம் அறக்கட்டளை சார்பில் ரூ.7 கோடியே 50 லட்சம் செலவில் அனைத்து வசதிகளுடன் கூடிய எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டு, நேற்று திறப்பு விழா நடந்தது. இந்த விழாவுக்கு எஸ்.கே.எம் குழும நிறுவனங்களின் தலைவர் எஸ்.கே.எம் மயிலானந்தம் தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார். விழாவிற்கு வருகை தந்தவர்களை பிகேபி கல்வி நிறுவனங்களின் தலைவர் பிகேபி அருள் வரவேற்றார். ஈரோடு  எம்.பி.  கணேசமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நவீன எரிவாயு தகனமேடை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த எரிவாயு தகன மேடை மூலம் ஈரோடு, மொடக்குறிச்சி, சிவகிரி, கொடுமுடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறுவர்.

erode

இந்த விழாவில் நாமக்கல் எம்.பி ஏ.கே.பி.சின்ராஜ், திருச்செங்கோடு எம்.எம்.ஏ. ஈ.ஆர்.ஈஸ்வரன், பரமத்தி வேலூர் எம்.எல்.ஏ. எஸ்.சேகர். கொடுமுடி யூனியன் சேர்மன் லட்சுமி ராஜேந்திரன், மொடக்குறிச்சி யூனியன் சேர்மன் எஸ்.கணபதி, பாசூர் பேரூராட்சி தலைவர் பழனியம்மாள் சின்னசாமி, அனைத்து வணிகர் சங்க செயலாளர் ராஜமாணிக்கம், எஸ்கேஎம் ஸ்ரீ குழுமம் நிர்வாக இயக்குனர் சிவ்குமார், எஸ்கேஎம் அனிமல் பீட்ஸ் நிர்வாக இயக்குனர் சந்திரசேகர். சண்முகா சால்ட் அண்ட் கெமிக்கல் நிர்வாக இயக்குனர் ராஜமாணிக்கம், அன்னை இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் நிர்வாக இயக்குனர் அசோக்குமார், வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து எஸ்கேஎம் குழும நிறுவனங்களின் தலைவர் எஸ்கேஎம் மயிலானந்தன் கூறும்போது, இந்த எரியூட்டும் மயானம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். மாலை 6 மணி வரை எரியூட்டும் கட்டணம் ரூ 3,500-ம், மாலை 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரை எரியூட்டும் கட்டணம் ரூ.5 ஆயிரம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் கட்டணம் போக-வர இரண்டும் சேர்த்து 20 கி.மீட்டருக்குள் ரூ.1000-ம், 40 கி.மீட்டருக்குள் ரூ.1,500-ம், 60 கி.மீட்டருக்குள் ரூ.2 ஆயிரமும், 60 கி.மீட்டருக்கு மேல் இருந்தால் கி.மீட்டருக்கு ரூ.10 கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும். விருப்பமுள்ளவர்கள் மோட்ச விளக்கு ஆற்றில் விடுவதற்கு பரிசல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அஸ்தியை சேமித்து வைக்க லாக்கர் வசதியும் உள்ளது' என்றார்.