கோவையில் மேம்பாலத்தில் சென்றபோது பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் பலி!

 
accident

கோவை - திருச்சி சாலையில் உள்ள மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் பாலத்தில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். 

கோவை டவுன்ஹால் தாமஸ் வீதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (51). இவர் ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள கடையில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை ஆனந்தகுமார், தனது இருசக்கர வாகனத்தில் கோவை - திருச்சி மேம்பாலத்தின் மீது சிங்காநல்லுர் நோக்கி சென்று கொண்டிருந்தார். சுங்கம் பகுதி அருகே சென்றபோது, மேம்பாலத்தில் இருந்த வேகத்தடையில் ஏறியதில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறியது.

dead body

இதில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஆனந்தகுமார் பாலத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த ஜுன் 11ஆம் தேதி பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்ட நிலையில், சில நாட்களிலேயே அடுத்தடுத்து 2 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இந்த நிலையில், தற்போது ஆனந்த குமாருடன் சேர்ந்து பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

தகவலின் பேரில் கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.  சம்பவ இடத்தை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.