கோவையில் வளர்ப்பு நாய் குட்டியை கொடூரமாக அடித்துக்கொன்ற நபர் கைது!

 
cbe

கோவை வடவள்ளி பகுதியில் 2 மாத வளர்ப்பு நாய் குட்டியை கொடூரமான முறையில் தாக்கி கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் வடவள்ளி சோமையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார்(26). தனியார் நிறுவன ஊழியரான இவர், தனது வீட்டில் 2 மாத நாய்க்குட்டியை வளர்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் செந்தில். கடந்த சில நாட்களுக்கு முன் இவர் மதுபோதையில், சிவகுமாரின் நாய் குட்டியை கற்கள் மற்றும் கம்பினால் கொடூரமாக தாக்கி கொன்றார். இதனை தட்டிக்கேட்ட சிவகுமாரையும் அவதூறாக பேசி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து சிவகுமார் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

arrest

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வந்தனர். இந்த நிலையில், செந்தில் 2 மாத நாய்க்குட்டியை கொடூரமான முறையில் தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விலங்குகள் நல ஆர்வலர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து, தற்போது, செந்திலை வடவள்ளி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.