மேட்டூர் அருகே மின்வேலியில் சிக்கி ஆண் காட்டுயானை உயிரிழப்பு - வனத்துறையினர் விசாரணை!

 
elephant

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைத்த மின்வேலியில் சிக்கி ஆண் காட்டுயானை பரிதாபமாக உயிரிழந்தது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி கூழ்கரடு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் புஷ்பநாதன். விவசாயி. இவர் வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள தனது விவசாய தோட்டத்தில் வன விலங்குகள் புகாமல் தடுப்பதற்காக தோட்டத்தை சுற்றி கம்பிவேலி அமைத்து, அதில் சட்ட விரோதமாக மின்சாரத்தை பாய்ச்சி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை சென்னம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட வடபருகூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று, புஷ்பநாதனின் தோட்டத்திற்குள் நுழைய முயன்றுள்ளது. அப்போது, சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி அந்த காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது. 

mettur

இதனை கண்ட அந்த பகுதி பொதுமக்கள், இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.  அதன் பேரில், மேட்டூர் வனச்சரக அலுவலர் அறிவழகன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, உயிரிழந்த யானையின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, வனத்துறை மருத்துவர்கள் மூலம் யானைக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த புஷ்பநாதன் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின்வேலியில் சிக்கி காட்டுயானை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.