திருச்சி அருகே சாலையோரம் நின்ற ஆம்னிவேன் மீது லாரி கவிழ்ந்து விபத்து... சிறுமி உள்பட இருவர் பலி!

 
vathalai

திருச்சி மாவட்டம் வாத்தலையில் சாலையோரம் நின்ற ஆம்னிவேன் மீது சிமெண்ட் பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில் சிறுமி உள்பட இருவர் உயிரிழந்தனர்.  

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராசாத்தி(43). இவர் நேற்று திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக குடும்பத்துடன் ஆம்னி வேனில் சென்று கொண்டிருந்தார். திருச்சி மாவட்டம் வாத்தலை பகுதியில் திருச்சி - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது டீ குடிப்பதற்காக ஆம்னி வேனை சாலையோரத்தில் நிறுத்தி உள்ளனர். அப்போது,  நாமக்கல்லில் இருந்து சிமெண்ட் மூட்டைகள் ஏற்றிக்கொண்டு திருச்சிக்கு வந்த லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற ஆம்னி வேன் மீது கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

vathalai

இந்த விபத்தில் ஆம்னி வேன் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி ராசாத்தி மற்றும் இரண்டரை வயது பெண் குழந்தை ரக்ஷனா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒரு பெண் பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாத்தலை போலீசார், காயமடைந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பலியான இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த விபத்து குறித்து புகாரின் அடிப்படையில் வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.