வால்பாறையில் வீடு புகுந்து பூனையை கவ்விச்சென்ற சிறுத்தை... சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

 
leopard

வால்பாறையில் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, அங்கிருந்த பூனையை கொன்று கவ்விச்செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வரும் நிகழ்வுகள் சமீப நாட்களாக அதிகரித்துள்ளன. இந்த நிலையில், வால்பாறை கூட்டுறவு காலனி பகுதியில் வசிக்கும் அம்ரேஷ் என்பவர் தனது வீட்டில் பூனை ஒன்றை வளர்த்து வந்தார். கடந்த சில நாட்களாக அந்த பூனையை காணவில்லை. இதனால் அவர் பல்வேறு இடங்களில் தேடியபோதும், பூனை கிடைக்கவில்லை. இதனை அடுத்து, தனது வீட்டின் அருகில் பொருத்தி உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளார்.

leopard

அப்போது, இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று அவரது வீட்டிற்குள் புகுந்து, பூனையை கொன்று கவ்வியபடி சாலையில் நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது. இதனை கண்டு அம்ரேஷ் மற்றும் அந்த பகுதி குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தைகள் புகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.