கோவை அருகே கோழிப்பண்ணையில் புகுந்து கோழியை பிடித்துச்சென்ற சிறுத்தை... சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

 
leopard

கோவை மாவட்டம் கணுவாய் அருகே கோழிப்பண்ணைக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, அங்கிருந்த கோழிகளை பிடித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் கணுவாய் அடுத்த மோமையம்பாளையம் யமுனா நகர் பகுதியில் அஷ்வின் என்பவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று காலை பண்ணையில் இருந்த கோழி மாயமானதால், அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது, அதிகாலை 4 மணி அளவில் கோழிப்பண்ணைக்குள் சிறுத்தை ஒன்று புகும் காட்சிகள் பதிவாகி இருந்தது. பண்ணைக்குள் புகுந்த அந்த சிறுத்தை, அங்கிருந்த கோழிகளை வாயில் கவ்விக்கொண்டு அங்கிருந்து செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. இதனால் கோழிப்பண்ணை ஊழியர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

leopard

கடந்த சில நாட்களுக்கு முன் கணுவாய் திருவள்ளுவர் நகர் மற்றும் சோமையனுர் பகுதிகளில் ஆடுகளை சிறுத்தை பிடித்துச்சென்ற நிலையில், தற்போது கோழிகளை பிடித்துச்சென்றதால் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ள அந்த பகுதி மக்கள் கிராமத்திற்குள் புகும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, பண்ணையில் இருந்த கோழிகளை சிறுத்தை பிடித்துச்செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.