ஈரோடு அருகே கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை!

 
poison

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (37). விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு ஈஸ்வரி (30) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். சின்னசாமி, வெளியூரில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். இதனால் 3 மாதங்களுக்கு ஒரு முறை குடும்பத்தினரை நேரில் சென்று பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த ராயபாளையத்தை சேர்ந்த முருகேசன் என்பவரது தோட்டத்தில் கூலி வேலைக்கு சேர்ந்துள்ளதாக, மனைவி ஈஸ்வரிக்கு தகவல் தெரிவித்துள்ளார். 3 மாதங்களுக்கு பின்னர் ரூ. 5 ஆயிரம் பணம் அனுப்பிய அவர், தீபாவளி முடிந்து ஒரு வாரம் கழித்து ஊருக்கு வருவதாக கூறியுள்ளார். 

erode gh

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை காலை சின்னசாமி திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, தோட்ட உரிமையாளர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த சின்னசாமியின் மனைவி ஈஸ்வரி இது குறித்து சித்தோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னசாமி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.