மளிகைக்கடையை உடைத்து அரிசி, பிஸ்கட்டை உண்டு மகிழ்ந்த யானைக்கூட்டம்... கோவையில் பரபரப்பு!

 
elephant

கோவை மாவட்டம் பெரிய தடாகம் பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்த காட்டுயானைகள் கூட்டம், அங்கிருந்த மளிகைக்கடையை உடைத்து அரிசி, பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை எடுத்து சாப்பிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் பெரிய தடாகம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 7 காட்டுயானைகள், உணவு மற்றும் தண்ணீர் தேடி நேற்று அதிகாலை தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உலா வந்தன. அப்போது, கூட்டத்தில் இருந்த 3 யானைகள் அங்கிருந்த மளிகைக்கடை ஒன்றின் கதவை உடைத்து கடையில் இருந்த அரிசி, சர்க்கரை, பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை எடுத்து சாப்பிட்டன.

erode

இது குறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இந்த நிலையில், யானைகள் மளிகைக்கடை கதவை உடைத்து அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை சாப்பிடுவதை அப்பகுதிபொதுமக்கள் சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து, அதனை சமுக வலைதளங்களில் வெளியிட்டனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது  வைரலாகி வருகிறது.