சூலூர் அருகே நள்ளிரவில் குடியிருப்பு பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றிய கும்பல் - பொதுமக்கள் அச்சம்!

 
cbe

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே நள்ளிரவில் ஆயுதங்களுடன் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள சங்கோதி பாளையம், செல்லப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மர்மநபர்கள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தோட்ட பகுதிகளில் தனியே இருக்கும் வீடுகளில் புகுந்து, அங்கிருந்தவர்களை மிரட்டி பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்றனர். 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட அவர்கள், 2 வடமாநில தொழிலாளர்கள் தாக்கி அவர்களிடம் இருந்த செல்போன்களை பறித்துச் சென்றனர்.

cbe

இது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது,  கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதனை அடுத்து, கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளை நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது, மர்மநபர்கள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீடுகளின் கதவுவை தட்டி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும், வீட்டின் கூரைகள் மீது ஏறி மிரட்டல் விடுக்கும் காட்சிகளும் பதிவாகி இருந்தன. இந்த காட்சிகள் அடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார், தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், சந்தேகத்தின் பேரில் போலீசார் 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.