பைக்கில் உடன் வந்த நண்பன் விபத்தில் சிக்கி பலி... குற்ற உணர்ச்சியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

 
விழுப்புரம்

தன்னுடன் பைக்கில் வந்த நண்பன் விபத்தில் சிக்கி உயிரிழந்ததால் குற்ற உணர்ச்சியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் செஞ்சியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவரது மகன் பிரபு (20). அதே பகுதியை சேர்ந்தவர் திருமால் மகன் சீனிவாசன். நண்பர்களான இருவரும் நேற்று முன்தினம் செஞ்சியில் இருந்து இருசக்கர வாகனத்தில் விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தர். பிரபு வாகனத்தை ஓட்டிச் சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சாலை கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பிரபு லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

suicide

இதனிடையே, தான் விபத்தை ஏற்படுத்தியால் நண்பர் சீனிவாசன் உயிரிழந்து விட்டதாக கருதிய பிரபு குற்ற உணர்வினால் வேதனையடைந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் தனது கழுத்தை பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தார். உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின்னர் நேற்று வீடு திரும்பிய பிரபு, தனது வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து வந்த செஞ்சி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நண்பன் விபத்தில் இறந்ததால் குற்ற உணர்ச்சியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.