குளியல் அறையில் வழுக்கி விழுந்து அரசு பெண் ஊழியர் பலி!

 
dead

ஈரோட்டில் குளியல் அறையில் வழுக்கி விழுந்து அரசு பெண் ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு 46 புதூர் நொச்சிகாட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன் (47). இவர் அந்தியூர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி குணவதி (37). இவர் வீரப்பன்சத்திரம் அரசு விதை சான்று அலுவலகத்தில் தட்டச்சராக பணிபுரிந்து வந்தார். இத்தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை காலை ராஜசேகரன் மகனை பள்ளியில் விட்டு விட்டு, பணிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்திற்கு பின் ராஜசேகரனுக்கு, குணவதி அலுவலகத்தில் இருந்து பேசிய ஊழியர்கள், அவர் இன்னும் பணிக்கு வரவில்லை என்று கூறி உள்ளனர்.

erode gh

இதனால், ராஜசேகரன் குணவதிக்கு போன் செய்தபோது, அவர் நீண்ட நேரமாக அழைப்பை ஏற்கவில்லை.  இதனால் வீட்டின் அருகில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்து,  வீட்டில் சென்று பார்க்கும்படி கூறி உள்ளார். அவர்கள் சென்று பார்த்தபோது கதவு உட்புறமாக தாழிடப்பட்டு இருந்துள்ளது. மேலும், நீண்ட நேரமாக கூப்பிட்டும் குணவதி பதில் அளிக்காததால் இதுகுறித்து ராஜசேகரனுக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், வீட்டிற்கு வந்த ராஜசேகரன் கதவை உடைத்துச் சென்று பார்த்துள்ளார்.

அப்போது, குளியல் அறையில் குணவதி வழுக்கி விழுந்த நிலையில், மயங்கிக் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜசேகர், அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு குணவதியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்