செம்பட்டி அருகே வணிக வளாகத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் தம்பதி பலி!

 
dgl

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே வணிக வளாகத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகேயுள்ள வீரக்கல் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (40). இந்து முன்னணி பிரமுகர். இவர் செம்பட்டி அடுத்த புல்லுவெட்டி குளம் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் ஸ்ரீமதுரை மீனாட்சி அம்மன் என்ற பட்டாசு கடையை நடத்தி வருகிறார். மேலும், வணிக வளாகத்தின் மாடியில் தனது மனைவி நாகராணி (35), பிள்ளைகள் தீப்திகா (7),  கனிஷ்கா (5),  மோகன் (4) ஆகியோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் பட்டாசு கடையில் திடீரென பட்டாசுகள் வெடித்து சிதறி உள்ளன. இந்த வெடி விபத்தில் மாடி வீடு முற்றிலும் இடிந்து தரை மட்டமாகியது. அப்போது வீட்டில் இருந்த ஜெயராமனும், நாகராணியும் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர்.

dgl gh

வணிக வளாகத்தின் அருகில் நின்றிருந்த கார்கள் சேதமடைந்தன. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் செம்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆத்தூர் மற்றும் வத்தலகுண்டு தீயணைப்பு துறையினர், செம்பட்டி போலீசார், ஜேசிபி இயந்திரம் மூலம் இடிபாடுகளில் சிக்கிய ஜெயராமன், அவரது மனைவி நாகராணியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் திண்டுக்கல் எஸ்பி.பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்பு பணியை பார்வையிட்டார்.

இந்த நிலையில், இரவு 10 மணி அளவில் ஜெயராமனும், அவரது மனைவி நாகராணியும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இதனை தொடர்ந்து, இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.