ஆம்பூரில் இருசக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதல்... அக்காள், தங்கை பலி!

 
ambur

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சிக்னலில் நின்ற இருசக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் அக்காள், தங்கை பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள வீராங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மனைவி  அனுராதா. இவர்களுக்கு ஜெயஸ்ரீ (15), வர்ஷா ஸ்ரீ (12) என 2 மகள்கள் உள்ளனர். இருவரும் ஆம்பூர் அருகே உள்ள கன்னிகாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் முறையே 12 மற்றும் 6 ஆம் வகுப்பு படித்து வந்தனர். இந்த நிலையில், இன்று காலை தண்டபாணி, மகளை பள்ளியில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார். ஆம்பூர் ஓ.ஏ.ஆர். திரையரங்கம் அருகில் உள்ள சிக்னலில் காத்துக்கொண்டிருந்தார்.

ambur

அப்போது, பின்னால் கர்நாடகாவில் இருந்து வேலூர் நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியது. இதில் லாரி சக்கரத்தில் சிக்கி ஜெயஸ்ரீ, வர்ஷாஸ்ரீ சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தண்டபாணி பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் டவுன் போலீசார், தண்டபாணியை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்தில் பலியான 2 மாணவிகளின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய லாரி ஒட்டுநர் பொதுமக்கள் தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் அவரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.