சூளகிரி அருகே சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி!

 
accident

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பழங்களை ஏற்றிவந்த சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழந்தார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து பழங்களை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வேனில், மேல் பகுதியில் கூலி தொழிலாளர்கள் அமர்ந்து சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சின்னார் பகுதியில் ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வேனின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த சென்னை மாதவரத்தை சேர்ந்த நாராயணன்(54) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

sulagiri

மேலும், வேன் ஓட்டுநர் உள்ளிட்ட 5 பேர் பலத்த காயமடைந்தனர்.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூளகிரி போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த நாராயணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.