திருச்சியில் சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!

 
car fire

திருச்சி அரியமங்கலத்தில் சாலையில் சென்ற கார் தீடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம் காட்டூர் கைலாஷ் நகரை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் பிரபல தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று மாலை ராஜேஷ் தனது குடும்பத்தினருடன் காரில் திருச்சிக்கு  சென்று கொண்டிருந்தார். அரியமங்கலம் ஆயில் மில் ரோடு சோதனைச்சாவடி அருகே சென்றபோது காரில் இருந்து திடீரென கரும்புகை வெளியாகி உள்ளது. இதனை கவனித்த ராஜேஷ், உடனடியாக காரை சாலையோரம் நிறுத்திவிட்டு குடும்பத்தினருடன் கீழே இறங்கினார்.  இதனை அடுத்து சிறிது நேரத்தில் காரில் தீப் பற்றி மளமளவென கார் முழுவதும் தீ பரவியது.

car fire

இதனால் சாலையில் கார் கொழுந்து விட்டு எரிந்தது. இதனை கண்ட அந்த பகுதி பொதுமக்கள்,  தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இந்த விபத்து குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.