ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதல் - இளம்பெண் பலி!

 
accident

 ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலையோரம் நின்ற லாரியின் மீது கார் மோதிய விபத்தில் இளம்பெண் பரிதாமாக உயிரிழந்தார். மேலும், 2 பெண் குழந்தைகள் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் கணபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணுவர்தன் (40). இவர் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்ற உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு காரில் மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்களுடன் கடையநல்லூருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். காரை அவரது சகோதரர் சரவணராஜ் ஓட்டிச் சென்றார். நேற்று அதிகாலை 3 மணி அளவில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே செம்படையான் விலக்கு பகுதியில் மதுரை - ராஜாபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் மீது கார் அதிவேகமாக மோதி விபத்திற்குள்ளானது.

srivilliputhur

இதில் காரில் பயணித்த சரவணராஜின் மனைவி ஹரிபிரியா, விஷ்ணுவர்தன், அவரது மனைவி பிரதீபா,  2 மகள்கள் மற்றும் உறவினர் கோவர்தனன் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை அந்த பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்துர் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே ஹரிபிரியா பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து அங்கு வந்த கிருஷ்ணன்கோவில் போலீசார், பலியான ஹரிபிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.