கூண்டில் அடைக்கப்பட்டுள்ள புலியின் வாயில் சிக்கிய பல் துண்டு... அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய கால்நடை மருத்துவர்கள்!

 
cbe

வால்பாறை மானாம்பள்ளியில் கூண்டில் அடைக்கப்பட்டு உள்ள புலியின் வாயில் சிக்கிய உடைந்த பல் துண்டை அறுவை சிகிச்சை மூலம் கால்நடை மருத்துவர்கள் அகற்றினர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள முடீஸ் பஜார் பகுதியில் கடந்தாண்டு செப்டம்பர் 27ஆம் தேதி உடல் நலிவுற்ற நிலையில் உலாவிய புலிக்குட்டியை, மானாம்பள்ளி வனத்துறையினர் வனக்குழுவினருடன் இணைந்து பத்திரமாக பிடித்தனர். தொடர்ந்து, அந்த புலிக்குட்டி அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில் உள்ள மனித - வனவிலங்கு மோதல் தடுப்பு மற்றும் மீட்பு மையத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. அங்கு புலிக்குட்டிக்கு தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தொடர்ந்து, மானாம்பள்ளி வனப்பகுதியில் உள்ள வனத்துறையினர் தங்கும் விடுதிக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் புலிக்குட்டியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து புலிக்கு தானகவே வேட்டையாடி சாப்பிட தேவையான பயிற்சி அளிக்க முடிவு செய்து, மந்திரிமட்டம் பகுதியில் ரூ.75 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் கூண்டு அமைக்கப்பட்டது. அங்கு பயிற்சியின் காரணமாக கோழி, முயல் போன்ற விலங்குகளை வேட்டையாடி சாப்பிட்டது.இந்த நிலையில், புலியின் உடல்நிலை குறித்து கால்நடை மருத்துவகள் மேற்கொண்ட பரிசோதனையில், புலிக்கு பல் வலி மற்றும் பல் ஈறுகளில் தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும், உடைந்த பல் துண்டு ஒன்று ஈறுகளில் சிக்கியுள்ளதும் தெரியவந்தது.

cbe

முதன்மை வனவிலங்கு பாதுகாவலர் உத்தரவின் பேரில், அந்த பல் துண்டை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, வண்டலுர் உயிரியல் பூங்கா, கால்நடை மருத்துவர் ஸ்ரீதரன், ஆனைமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் விஜயராகவன், சத்திமங்கலம் புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் சதாசிவம் உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவக்குழுவினர் சுமார் 5 மணிநேரத்திற்கும் மேலாக புலிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு, உடைந்த பல்துண்டை அகற்றினர்.

பல் சிக்கியிருந்த பகுதி பயோடென்டைன் மூலம் அடைக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் மருத்துவ குழுவினர் புலியின் உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தொடர் கண்காணிப்பிற்கு பின்னர் உடல்நிலை மற்றும் பல் பரிசோதனை மேற்கொண்டு, மீண்டும் புலியை கூண்டில் விடுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.