ஆரணி அருகே நாதஸ்வர பயிற்சி பெற்றுவந்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை... தந்தை புகாரின் பேரில் போலீசார் விசாரணை!

 
suicide

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நாதஸ்வர பயிற்சி பெற்று வந்த 16 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கடப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது 16 வயது மகன் நாகராஜ். இவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த எஸ்.வி.நகரம் பகுதியில் வசிக்கும் நாதஸ்வர கலைஞரான சண்முகம் என்பவரது, வீட்டில் தங்கி கடந்த 2 ஆண்டுகளாக நாதஸ்வர பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நாகராஜ் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். நேற்று மாலை வீட்டின் மாடியில் உள்ள குளியல் அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

arani

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சண்முகம், அவரது மகன் ராஜா ஆகியோர், நாகராஜை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த நாகராஜின் தந்தை கணேசன், தனது மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் நாகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நாகராஜ் திருவள்ளுரை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததும், கடந்த சில நாட்களாக அந்த பெண் பேசாததால் மனமுடைந்து காணப்பட்டு வந்ததும் தெரிய வந்தது. இதனால் நாகராஜ் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு எவும் காரணமா? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.