வேடச்சந்தூர் அருகே தூளி ஆடியபோது சேலை கழுத்தை இறுக்கியதில் சிறுவன் பலி!

 
dgl

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தூளி விளையாடியபோது சேலை கழுத்தை இறுக்கியதில் 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்துள்ள மாரம்பாடி நந்திகோவில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சேவியர். சோப்பு கம்பெனி ஊழியர். இவரது மூத்த மகன் லெனின் (10). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று சேவியர், தனது இளைய மகனுடன் வெளியூரில் நடைபெற்ற உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இதனால் சிறுவன் லெனின் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

dead body

அப்போது, வீட்டின் பின்புறத்தில் உள்ள வேப்பமரத்தில் தனது தாயாரின் சேலையில் தூளி கட்டி விளையாடி உள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக சேலையில் சிறுவனின் கழுத்து இறுக்கியுள்ளது. இதில் லெனின் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். மாலையில் சேவியர் வீட்டிற்கு வந்தபோது லெனினை காணாததால் பின்புறம் சென்று பார்த்துள்ளார். அப்போது, தூளியில் சிறுவன் மூச்சு பேச்சின்றி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த சேவியர், அவனை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் லெனின் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த விசாரித்து வருகின்றனர்.