ஆம்பூர் அருகே பாம்பு கடித்து சிறுவன் பலி... சாலை அமைப்பது தொடர்பாக ஆட்சியர் நேரில் ஆய்வு!

 
ambur

ஆம்பூர் அருகே பாம்பு கடித்து இறந்த சிறுவனின் உடலை உறவினர்கள் டோலி கட்டி தூக்கிச்சென்ற சம்பவம் எதிரொலியாக, மலைக்கிராமத்திற்கு சாலை வசதி அமைப்பது தொடர்பாக திருப்பத்தூர் ஆட்சியர் அமர்குஷ்வாஹா நேரில் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள அரங்கல் துருகம் ஊராட்சி குப்புராஜபாளையம் இருளர் காலனி பகுதியை சேர்ந்தவர் சிவன்.  கூலித் தொழிலாளி. இவரது மனைவி சாவித்ரி. இவர்களது மகன் அர்ஜுன் என்கிற அஜித்குமார் (12). இவர் அரங்கல் துருகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தபோது அர்ஜுனை விஷப்பாம்பு கடித்துள்ளது.

ambur

இதனை அடுத்து, அர்ஜுனை உறவினர்கள் சாலை வசதி இல்லாததால் டோலி கட்டி தூக்கிவந்து ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்ற நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் உயிரிழந்தார். இதனை அடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் மலையடிவாரத்துக்கு கொண்டுவரப்பட்ட மாணவரின் உடல் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு சடலத்தை டோலி கட்டி தூக்கிச்சென்றனர்.

இந்த நிலையில், குப்புராஜா பாளையம் மலைக்கிராமத்திற்கு சாலை வசதி அமைப்பது தொடர்பாக நேற்று மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா, ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் ஆகியோர் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஆய்வுசெய்தனர். அப்போது, அபிகிரிபட்டரை கிராமம் முதல் குப்புராஜா பாளையம் கிராமம் வரை சாலை அமைக்க நடவடிக் கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.