தக்கலை அருகே கல்லூரி வாகனம் மீது பைக் மோதி விபத்து - தொழிலாளி பலி!

 
accident

குமரி மாவட்டம் தக்கலை அருகே சாலையோரம் நின்ற கல்லூரி வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். 

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கல்குறிச்சி ஊராட்சி மஞ்சனாவிளை பகுதியை சேர்ந்தவர்கள் மணி - லில்லி பாய் தம்பதி. இவர்களது மகன் ஆசீர் மனுவேல் (33). இவர் பிளம்பர் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆசீர் மனுவேல் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி  கொண்டிருந்தார். முத்தளக்குறிச்சி பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்ற கல்லூரி வாகனத்தின் பின்புறம் இருசக்கர வாகனம் மோதி விபத்திற்கு உள்ளானது.

thakalay

இதில் ஆசீர் மனுவேல் பலத்த காயமடைந்தார். அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று  அதிகாலை ஆசீர் மனுவேல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில், தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.