கடையம் அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட கரடி உயிரிழப்பு!

 
bear

தென்காசி மாவட்டம் கடையம் 3 பேரை தாக்கியதால் வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட பெண் கரடி பரிதாபமாக உயிரிழந்தது.

தென்காசி மாவட்டம் கடையம் அடுத்த பெத்தான் பிள்ளை குடியிருப்பு கிராமத்தில் நேற்று முன்தினம் அதிகாலை கரடி ஒன்று சாலையை கடந்து சென்றது. அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற மாசாலா வியாபாரி வைகுண்டமணி என்பவரை கரடி தாக்கியது. அவரது அலறல் சத்தம் கேட்டு, பெத்தான்பிள்ளை குடியிருப்பை சேர்ந்த நாகேந்திரன், சைலப்பன் ஆகியோர் வைகுண்டமணியை காப்பாற்ற முயன்றபோது அவர்களையும் கரடி தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த 3 பேரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 

 bear

இந்த நிலையில், 3 பேரை தாக்கிய சுமார் 10 வயது மதிக்கத்தக்க பெண் கரடியை வனத்துறையினர் அன்றிரவு 2 மயக்க ஊசிகள் செலுத்தி பிடித்தனர். பின்னர் அந்த கரடி களக்காடு அருகே வனப்பகுதிக்குள் கொண்டு விடப்பட்டது. இந்த நிலையில் இன்று அந்த கரடி பரிதாபமாக உயிரிழந்தது. இதனை அடுத்து வனத்துறையினர் அந்த கரடிக்கு, கால்நடை மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். அதில் அந்த பெண் கரடி நுரையீரல் பாதிப்பு காரணமாக உயிரிழந்தது தெரியவந்தது.