அந்தியூர் அருகே வடமாநில சிறுமி தூக்கிட்டு தற்கொலை!

 
 suicide

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே வடமாநில சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஆசானூர் முல்லா(48). இவரது மனைவி காசினா காட்டுன். இவர்களுக்கு 2 மகன்களும், 13 வயதில் தாஸ்லிமா என்ற மகளும் உள்ளனர். ஆசானூர் முல்லா, குடும்பத்துடன் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த சின்னதம்பி பாளையம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் தங்கி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், தாஸ்லிமா சம்பவத்தன்று வீட்டில் தனது துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக தஸ்லிமாவை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

anthiyur

பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறுமி தாஸ்லிமா பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் அந்தியூர் போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமி பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்து  கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.