டிராக்டரில் இருந்து தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி... திருச்சி அருகே சோகம்!

 
dead

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உழவுப் பணியின்போது டிராக்டரில் இருந்து தவறி விழுந்து 2 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. 

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள மேலபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன். விவசாயி. இவரது 2 வயது மகன் சஞ்சித். கடந்த வியாழக்கிழமை அன்று அதே பகுதியை சேர்ந்த மதியழகன்(29) என்பவர், அங்குள்ள விவசாய தோட்டத்தில் டிராக்டரில் உழுது கொண்டிருந்தார். அப்போது, அருகே குழந்தை சஞ்சித் அழுது கொண்டிருந்துள்ளான். இதனை கண்ட மதியழகன், குழந்தையை தன்னுடன் டிராக்டரில் ஏற்றிக் கொண்டு உழவுப் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக குழந்தை சஞ்சித் டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளான்.

kattuputhur

இதில் பலத்த காயமடைந்த குழந்தையை பெற்றோர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை சஞ்சித் நேற்று உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து குழந்தையின் தந்தை தியாகராஜன் காட்டுபுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். டிராக்டரில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.