தஞ்சை அருகே 12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை... பள்ளி மாணவர்கள் இருவர் கைது!

 
sexual-harassment

தஞ்சாவூர் அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த பள்ளி மாணவர்கள் இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் தொழிலாளி. இவரது 12 வயது மகன், தனியார் பள்ளி ஒன்றில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று அந்த சிறுவனை,  அதே கிராமத்தை சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள், தங்களது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அவர்கள் சிறுவனுக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த 12 வயது சிறுவன் கூச்சலிட்டு உள்ளார்.

thanjavur

இதனால் அச்சமடைந்த 10ஆம் வகுப்பு மாணவர்கள் இருவரும், இதுகுறித்து வெளியே கூறக்கூடாது என மிரட்டி அவரை அனுப்பி வைத்து உள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுவன், இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், அவர்கள் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த 10ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் சிறுவர் இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.