மேலூரில் துணிகரம்... தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 95 பவுன் நகை கொள்ளை... மர்மநபர்கள் கைவரிசை!

 
robbery

மதுரை மாவட்டம் மேலூரில் வீட்டின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், பீரோவில் இருந்த 95 பவுன் நகை மற்றும் ரூ.1.10 லட்சம் பணத்தை திருடிச்சென்றனர்.

மதுரை மாவட்டம் மேலூர் குமார் நகரை சேர்ந்தவர் பிரபுசங்கர். இவர் பெங்களூரில்  மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். மேலும், அங்கேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதனால் அவரது வீட்டை, மாமனார் பாலகிருஷ்ணன் கவனித்து வந்துள்ளார். நேற்று மாலை பாலகிருஷ்ணன் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, வீட்டின் ஜன்னல் கம்பிகளை அறுத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், பீரோவில் வைத்திருந்த 95 பவுன் நகை, ஏராளமான வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.1,10 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது.

melur

இதுகுறித்து அவர்  மேலூர்  காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், டிஎஸ்பி ஆர்லியஸ்ரொபோனி, காவல் ஆய்வாளர் சார்லஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகை பதிவுகள் சேகரிக்கப்பட்டது., தொடர்ந்து, இந்த கொள்ளை சம்பவம் குறித்து மேலூர் போலசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.