கிணத்துக்கடவு அருகே உணவில் விஷம் வைத்து 9 மயில்கள் கொலை - வனத்துறை விசாரணை!

 
peacock

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே வடபுதூரில் உணவில் விஷம் கலந்து 9 மயில்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தோட்ட உரிமையாளரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வடபுதூர் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி(60). விவசாயி. இவரது தோட்டத்திற்கு மயில்கள் அடிக்கடி உணவு தேடி வந்த நிலையில், நேற்று காலை உணவில் விஷம் கலந்து வைத்தாக கூறப்படுகிறது. இதனை சாப்பிட்ட சுமார் 8 பெண் மயில்கள் மற்றும் 1 ஆண் மயில் என 9 மயில்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அறிந்த குப்புசாமி,  அவசர அவசரமாக மயில்களை குழிதோண்டு புதைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். 

peacock

ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி கோட்டம் வனப் பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் ராமசுப்பிரமணியன் உத்தரவின் பேரிலும், துணை இயக்குநர் கணேசன் அறிவுரையின் படி வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் இறந்த மயில்களின் உடல்களை கைப்பற்றி  சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து, மயில்களை விஷம் வைத்து கொன்றது தொடர்பாக வனஉயிரினகுற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், உடற்கூறு ஆய்வு முடிவுகள் கடைத்த பின் சம்பந்தப்பட்ட நபர் மீது விரைவில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.