சேலம் வழியாக ரயிலில் கடத்திய 9 கிலோ கஞ்சா பறிமுதல்!

 
cannabis

சேலம் வழியாக ஆலப்புழா விரைவு ரயிலில் கடத்திச்சென்ற 9 கிலோ கஞ்சாவை ரயில்வே தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலப்புழா செல்லும் விரைவு ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக, சேலம் ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், நேற்று காலை சேலம் ரயில் நிலையத்திற்கு வந்த ஆலப்புழா விரைவு ரயிலில், சேலம் ரயில்வே தனிப்படை போலீசார் முத்துவேல், கண்ணன், சக்திவேல் ஆகியோர் ஏறி தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டியில் கேட்பாரற்ற நிலையில் டிராவல் பேக் கிடப்பதை கண்ட தனிப்படை போலீசார், இதுகுறித்து அந்த பெட்டியில் இருந்தவர்களிடம் விசாரித்தனர்.

salem

அப்போது, அது தங்களுடையது இல்லை என தெரிவித்தனர். இதனால் சந்தேகமடைந்த தனிப்படை போலீசார் அந்த பையை பிரித்து சோதனையிட்டனர். அப்போது, பையில் இருந்த பண்டல்களில் கஞ்சாவை மறைத்து கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து, சுமார் 5 பண்டல்களில் இருந்த 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், சேலம் ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு ரயில்வே போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, கஞ்சாவை கடத்திய நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.