பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் 8-ம் வகுப்பு மாணவர் தற்கொலை... கரூர் அருகே சோகம்!

 
 suicide

கரூர் அருகே பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் 8ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகேயுள்ள மணவாடி மருதம்பட்டி காலனியை சேர்ந்தவர்கள் காளிமுத்து - செல்வி தம்பதியினர். இவர்களது 2-வது மகன் நித்திஷ் (13). இவர் திண்டுக்கல் மாவட்டம் கூம்பூரில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி, அங்குள்ள அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கோவில் திருவிழாவிற்காக கடந்த சில நாட்களுக்கு முன் நித்திஷ் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது, தனக்கு செல்போன் வாங்கித் தரும்படி பெற்றோரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் தற்போது தங்களிடம் பணம் இல்லை என்றும், பின்னர் வாங்கி தருவதாகவும் தெரிவித்து உள்ளனர்.

karur

ஆனால் நித்திஷ் செல்போன் வாங்கித் தரக்கோரி பெற்றோரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இந்த நிலையில், நேற்று காலை பெற்றோர் வெளியே புறப்பட்டு சென்ற நிலையில், வீட்டில் யாரும் இல்லாதபோது நித்திஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளியணை போலீசார்,  அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து தந்தை காளிமுத்து அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். செல்போன் வாங்கி தராததால் பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.