திண்டுக்கல் அருகே ஈச்சர் வாகனத்தில் கடத்திய 870 கிலோ குட்கா பறிமுதல் - இருவர் கைது!

 
dgl

திண்டுக்கல் அருகே ஈச்சர் வாகனத்தில் குட்கா புகையிலை பொருட்களை கடத்திவந்த 2 நபர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 870 கிலோ குட்கா மற்றும் ஈச்சர் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

 திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பெங்களுருவில் இருந்து சட்ட விரோதமாக குட்கா புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக மாவட்ட எஸ்.பி., பாஸ்கரனுக்கு நேற்று தகவல் கிடைத்தது. அவரது அறிவுறுத்தலின் படி எஸ்.பி., தனிப்படை போலீசார், அம்பாத்துரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கரட்டழகன்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது சந்தேகத்தின் பேரில் அந்த வழியாக வந்த ஈச்சர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, ஈச்சரில் இருந்த மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை கடத்திச்செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

dgl

இதனை அடுத்து, ஈச்சரில் இருந்த 870 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஈச்சர் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக  ஈச்சர் வாகனத்தை ஓட்டி வந்த திருவண்ணாமலையை சேர்ந்த மதியழகன் (32) மற்றும் வேடப்பட்டியைச் சேர்ந்த அப்பாஸ்(32) ஆகிய இருவரையும் கைது செய்து, அம்பாத்துரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அம்பாத்துரை போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.