கேரளாவுக்கு டெம்போவில் கடத்திய 8 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - ஒட்டுநர் கைது!

 
ration rice

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை வழியாக  கேரளாவுக்கு டெம்போ வேனில் கடத்த முயன்ற 8 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக ஓட்டுநரை கைது செய்தனர். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் கடத்தலை தடுக்கும் விதமாக போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், களியக்காவிளை உதவி ஆய்வாளர் சிந்தாமணி தலைமையிலான போலீசார், நேற்று குழித்துறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த டெம்போ வாகனத்தை போலீசார் மறித்து சோதனை மேற்கொண்டனர்.

kumari

அப்போது, வாகனத்தில் இருந்த முட்டைகளில் ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரிய வந்தது. இதுகுறித்து வாகனத்தை ஓட்டிவந்த பெருஞ்சிலம்பு பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்பரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், ரேஷன் அரிசியை துத்துக்குடியில் இருந்து  கேரள மாநிலத்துக்கு கடத்திச்சென்றது தெரிய வந்தது. இதனை அடுத்து, போலீசார் தினேஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

தொடர்ந்து, 8 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தி டெம்போ வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, பறிமுதலான ரேஷன் அரிசியை மாவட்ட எஸ்.பி ஹரிகிரண் பிரசாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், ரேஷன் அரிசி மற்றும் வாகனம் குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.