கோவைக்கு ஆம்னி பேருந்தில் குட்கா கடத்திவந்த 8 பேர் கைது... 2 டன் குட்கா, ரூ.20 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல்!

 
gutka

பெங்களுருவில் இருந்து கோவைக்கு ஆம்னி பேருந்தில் குட்கா கடத்திவந்த 8 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 2 டன் குட்கா, ரூ.20 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 7 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கோவை அவினாசி சாலை நீலாம்பூர் தனியார் நட்சத்திர விடுதி அருகே சூலுர் தனிப்படை போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ஆம்னி பேருந்தை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர்.

cbe

அப்போது, ஆம்னி பேருந்தில் இருந்த மூட்டைகளில் சோதனையிட்டபோது அதில் அரசால் தடை செய்யப்பட்ட 500 கிலோ குட்கா, பான்மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.  இது தொடர்பாக, பேருந்தில் இருந்த செந்தில்குமார்(47), மேகபூப்பாஷா(30), செந்தில்ராஜா(44), ஜெயப்பிரகாஷ்(36) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்னி பேருந்து மற்றும் குட்காவை வாங்கிச் செல்ல வந்த கார், ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

cbe

மேலும், கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பெங்களுருவில் இருந்து கோவைக்கு விற்பனைக்காக குட்காவை கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும், அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் மயிலம்பட்டி கிராமத்தில் உள்ள வீட்டில் சோதனையிட்டனர். அப்போது அங்கு வாடகைக்கு அறை எடுத்து குட்காவை பதுக்கி வைத்திருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பரத் படேல்(26), அமரராம்(22), கோபால்(22), மைபால்(22) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.5 டன் குட்கா புகையிலை பொருட்கள், கார், இருசக்கர வாகனங்கள் மற்றும் ரூ.20 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

money ttn

தொடர்ந்து, கைதான 8 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களை கோவை மாவட்ட எஸபி பத்ரிநாராயணன் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மேலும் சிறப்பாக பணியாற்றி 2 டன் குட்கா, ரூ.20 லட்சம் பணம், வாகனங்களை பறிமுதல் செய்து, 8 பேரை கைது செய்த காவலர்களுக்கு, அவர் தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார்.