வாடிப்பட்டி அருகே 7 வயது சிறுமி உயிரிழப்பு... மருத்துவரின் தவறான சிகிச்சையால் இறந்ததாக பெற்றோர் புகார்

 
dead

வாடிப்பட்டி அருகே மருத்துவர் அளித்த தவறான சிகிச்சையால் 7 வயது சிறுமி உயிரிழந்ததாக கூறி பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது இளைய மகள் மேகா(7). சிறுமிக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீரென காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து, பெற்றோர் அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் சிறுமிக்கு, திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்து உள்ளார்.

police

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சிறுமியை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுமி மேகாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதனை அடுத்து, மருத்துவர் அளித்த தவறான சிகிச்சையால் சிறுமி மேகா உயிரிழந்ததாக கூறி அவரது தந்தை சுரேஷ் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரில் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் தனசேகர் என்பவர் தனியாக நடத்தி வரும் கிளினிக்கில் சிறுமி மேகாவுக்கு சிகிச்சை அளித்து வந்ததாகவும், அவர் அளித்த தவறான சிகிச்சையினால் சிறுமி உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.