பல் மருத்துவர் வீட்டின் கதவை உடைத்து 79 பவுன் நகை கொள்ளை!

 
robbery

பட்டுக்கோட்டையில் பல் மருத்துவர் வீட்டின் பின்பக்க தகவை உடைத்து 79 பவுன் நகை, 2 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அணைக்காடு புறவழிச்சாலை பகுதியில் வசித்து வருபவர் சிவராஜ். பல் மருத்துவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் சென்னைக்கு சென்றிருந்தார்.  நேற்று அதிகாலை தனது வீட்டில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை தனது செல்போன் மூலம் பார்க்க முயன்றார். ஆனால், கேமரா அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால், மருத்துவர் சிவராஜ், தனது உறவினர்களிடம் தெரிவித்து வீட்டிற்கு சென்று பார்க்கும்படி கூறி உள்ளார்.

thanjavur

 அதன்படி உறவினர்கள் சென்று பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உள்ளே சென்றுபார்த்போது, மர்மநபர்கள் பீரோவை உடைத்து 79 பவுன் நகைகள்,  2 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடிச்சென்றது தெரிய வந்தது. தகவல் அறிந்த மருத்துவர் சிவராஜ், இதுகுறித்து பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு மேப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.  மேலும், இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பல் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.