காரிமங்கலம் அருகே காரில் கடத்திய 750 கிலோ குட்கா பறிமுதல்!

 
karimangalam

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே காரில் கடத்திச்சென்ற 750 கிலோ குட்கா புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த பொன்னேரி பகுதியில் உள்ள கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று கார் ஓன்று சாலையோரம் நீண்ட நேரமாக நின்றிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அந்த பகுதி பொதுமக்கள், இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காரில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஏராளமான குட்கா புகையிலை பொருட்களை கடத்திச்செல்வது தெரிய வந்தது. இதுகுறித்து ரோந்து போலீசார், காரிமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

karimangalam

அதன் பேரில், காரிமங்கலம் காவல் ஆய்வாளர் வெங்கட்ராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரில் இருந்த 750 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து,  போலீசார் மேற்கொண்ட விசாரணையில் குட்காவை பெங்களுருவில் இருந்து சேலத்திற்கு கடத்திச்சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கார் ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.