மேலூர் அருகே கத்தியை காட்டி மிரட்டி 75 பவுன் நகை கொள்ளை!

 
robbery

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கத்தியை காட்டி மிரட்டி 75 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணத்தை முகமூடி கொள்ளையர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சத்தியபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபி(30). வெளிநாட்டிற்கு சென்று ஊர் திரும்பிய இவர், தற்போது கிராமத்தில் விவசாய பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு கோபியின் வீட்டிற்குள் முகமூடி அணிந்த 4 பேர் கும்பல் திடீரென புகுந்தது. தொடர்ந்து அவர்கள் கோபி, அவரது தாய் இந்திரா உள்ளிட்டோர் அணிந்திருந்த நகைகள் உள்பட 75 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பிச்சென்றனர்.

police

மேலும், கோபி மற்றும் அவரது குடும்பத்தினரை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு கொள்ளையர்கள் தப்பிச்சென்ற நிலையில், அருகில் உள்ளவர்கள் பூட்டை உடைத்து அவர்கள் மீட்டனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து மேலூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், மேலூர் டிஎஸ்பி பிரபாகரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளை சேகரித்தனர்.

தொடர்ந்து, இந்த கொள்ளை சம்பவம் குறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். கத்திமுனையில் 75 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.