74-வது குடியரசு தினம் - காஞ்சிபுரத்தில் தேசிய கொடியை ஏற்றிய ஆட்சியர் ஆர்த்தி!

 
kanchi

குடியரசு தினத்தையெட்டி காஞ்சிபுரத்தில் ஆட்சியர் ஆர்த்தி தேசிய கொடியை ஏற்றிவைத்து, பயனாளிகளுக்கு ரூ.2.03 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

நாட்டின் 74-வது குடியரசு தினத்தையொட்டி, காஞ்சிபுரத்தில் ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கில் இன்று ஆட்சியர் ஆர்த்தி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் மொழிப்போர் தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

kanchi

தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 26 காவல்துறை அதிகாரிகள், காவல் ஆளிநர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் காவலர் பதக்கங்களும், சிறப்பாக பணிபுரிந்த 117 காவல் துறையினருக்கு பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார். மேலும், இந்த விழாவில் அரசு துறை சார்பில் 112 பயனாளிகளுக்கு ரூ.2.03 கோடிமதிப்பிலான நலத்திட்ட உதவுகளையும் அவர் வழங்கினார்.

kanchi

மேலும், வருவாய், ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், கால்நடை, மீனவர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 335 அரசு அலுவலர்களுக்கும், 25 ஆண்டுகள் பணி முடித்தமைக்கான 4 நபர்களுக்கும் நற்சான்றிதழ்களை ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சரக டிஐஜி பகலவன், மாவட்ட எஸ்பி சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.