திருச்சியில் பெண் ரயில்வே ஊழியர் வீட்டில் 70 பவுன் நகை கொள்ளை... மர்மநபர்கள் கைவரிசை!

 
robbery

திருச்சியில் பெண் ரயில்வே ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 70 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்தவர் தனபால் மனைவி நாகலட்சுமி (57). இவர் ரயில்வே ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், நாகலட்சுமியின் உறவினர் மகளுக்கு வரும் 7ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்காக வாங்கிய நகைகளை, நாகலட்சுமி தனது வீட்டின் பீரோவில் பத்திரமாக வைத்துள்ளார். இந்த நிலையில், நேற்று திருமண ஏற்பாடுகள் தொடர்பாக நாகலட்சுமி வீட்டை பூட்டிவிட்டு, உறவினர்களுடன் மலைக்கோட்டை பகுதிக்கு சென்றுள்ளார். மதியம் வீட்டிற்கு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நாகலட்சுமி வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். 

dd
அப்போது, மர்மநபர்கள் வீட்டின் பீரோவை உடைத்து, அதில் இருந்த 70 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து நாகலட்சுமி, கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், தடயவியல் நிபுணர்களை அழைத்து, கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளையும் சேகரித்தனர். தொடர்ந்து, இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் 4 நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.