கோவை அருகே சோளக்காட்டிற்குள் முகாமிட்டுள்ள 7 காட்டு யானைகள்... வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு!

 
elephants

கோவை மாவட்டம் பச்சாம்பாளையம் அருகே சோளக்காட்டிற்குள் முகாமிட்டுள்ள 7 காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியான ஐயாசாமி மலை வனப்பகுதியில் இருந்து நேற்று காலை குட்டிகளுடன் வெளியேறிய 7 காட்டு யானைகள், சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் பேரூர் பச்சாபாளையம் பகுதியில் புகுந்தது. குட்டிகளுடன் யானைகள் முகாமிட்டுள்ளதை கண்ட கிராம மக்கள் அச்சத்தில் ஓட்டம் பிடித்தனர். இது குறித்து உடனடியாக மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில், கோவை மாவட்ட உதவி வனப் பாதுகாவலர் செந்தில்குமார், மதுக்கரை வனச்சரகர் அருண்குமார் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காட்டுயானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

elephant

அப்போது, யானைகள் மலைப்பகுதிக்கு செல்லாமல், அங்குள்ள சோளக்காட்டிற்குள் புகுந்து கொண்டது. இதனை அடுத்து, காட்டுயானைகள் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளுக்குள் வராமல் தடுக்க 3 குழுக்களாக பிரிந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும், மாலை 6 மணிக்கு மேல் யானைக்கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியை தொடங்க உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். சோளக்காட்டிற்குள் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.