ஓசூரில் சொகுசு காரில் கடத்திய 680 கிலோ குட்கா பறிமுதல் - இருவர் கைது!

 
hosur

ஓசூர் வழியாக சேலத்துக்கு சொகுசு காரில் கடத்த முயன்ற 680 கிலோ குட்கா மற்றும் கர்நாடக மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அட்கோ காவல் நிலைய போலீசார், நேற்று முன்தினம் பேத்தலப்பள்ளி பேருந்து நிறுத்தம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெங்களுருவில் இருந்து சேலம் நோக்கி சென்ற சொகுசு காரை மறித்து சோதனையிட்டனர். அப்போது காரில் இருந்த மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கடத்திச் செல்வது தெரிய வந்தது. மேலும், கர்நாடக மாநில மதுப் பாக்கெட்டுகளையும் மறைத்து எடுத்துச் சென்றதை கண்டுபிடித்தனர். 

housu hudco

இதனை அடுத்து, 680 கிலோ அளவிலான குட்கா, மதுப்பாக்கெட்டுகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரை அட்கோ போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரவிகுமார்(22), சுரேஷ்குமார் (26) ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் பெங்களுருவில் இருந்து சேலத்திற்கு குட்கா மற்றும் மதுபாக்கெட்டுகளை கடத்தியது தெரிய வந்தது. இதனை அடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.