வேடச்சந்தூர் அருகே சொகுசு காரில் கடத்திய 650 கிலோ குட்கா பறிமுதல் - ஓட்டுநர் கைது!

 
dgl

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே பெங்களுருவில் இருந்து சொகுசு காரில் கடத்திவந்த 650 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், இது தொடர்பாக கார் ஓட்டுநரை கைது செய்தனர்.

பெங்களூரில் இருந்து திண்டுக்கல் வழியாக தென்காசிக்கு காரில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக மாவட்ட எஸ்பி பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், எஸ்.பி தனிப்படையினர் உதவி ஆய்வாளர் ஷேக் தாவூத் தலைமையில் வேடச்சந்தூர் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சொகுசு காரை போலீசார் நிறுத்த முயன்றனர். போலீசாரை கண்டதும் ஓட்டுநர் காரை வேகமாக ஓட்டிச்சென்றார்.

gutka

இதனால் சந்தேகமடைந்த தனிப்படை போலீசார், அந்த காரை துரத்திச்சென்று கருக்காம்பட்டி அருகே மடக்கிப்பிடித்து சோதனையிட்டனர். அப்போது, காரில் மூட்டை மூட்டையாக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, காரில் இருந்த 650 கிலோ குட்கா புகையிலை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், இதுதொடர்பாக கார் ஒட்டுநர் விஜயை கைது செய்தனர்.

தொடர்ந்து, பறிமுதல் செய்த குட்கா மற்றும் கைதான ஓட்டுநரை, வேடச்சந்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு போலீசார் கார் ஒட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரிடம் குட்கா கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.