ஈரோடு மாவட்டத்தில் திருட்டு போன ரூ.8.47 லட்சம் மதிப்பிலான 65 செல்போன்கள் மீட்பு!

 
நச

ஈரோடு மாவட்டத்தில் திருட்டு மற்றும் காணாமல் போன ரூ.8.47 லட்சம் மதிப்பிலான 65 செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்டு, அதன் உரிமையாளர்களிடம் வழங்கினர்.

ஈரோடு மாவட்டத்தில் செல்போன் திருட்டு மற்றும் காணாமல் போனது தொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட எஸ்.பி. சசிமோகன் உத்தரவிட்டார். அதன் பேரில், சைபர் கிரைம் போலீசார் செல்போன் திருட்டு சம்பவங்கள் தொடர்பான விபரங்களை சேகரித்து மேற்கொண்ட துரித நடவடிக்கையின் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் திருடு போன ரூ.8.47 லட்சம் மதிப்பிலான 65 செல்போன்களை மீட்டனர்.

சசந

இதனை தொடர்ந்து, மீட்கப்பட்ட செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட எஸ்பி சசிமோகன் கலந்துகொண்டு செல்போன்களை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.  முன்னதாக கடந்தாண்டு ஏப்ரல் 27ஆம் தேதி 74 செல்போன்களும், அக்டோபர் மாதம் 1ஆம் தேதி 57 செல்போன்களும் மீட்கப்பட்டது.

தொடர்ந்து இவ்வருடம் ஜனவரி மாதம் 10ஆம் தேதி 69 செல்போன்களும், கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி 77 செல்போன்களும், கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி 63 செல்போன்களும், கடந்த ஜூன் மாதம் 4ஆம் தேதி 66 செல்போன்களும் என கடந்த 2 ஆண்டுகளில் திருட்டு மற்றும் காணாமல்போன 73 லட்சம் மதிப்பிலான 497 செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் சைபர் கிரைம் போலீசார் உடனிருந்தனர்.