மணப்பாறை ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு!

 
jallikkattu

மணப்பாறை அடுத்த ஆவாரங்காடு கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி இன்று நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள் மற்று 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள ஆவாரங்காடு கிராமத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அதன் படி, இன்றைய தினம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்த 600-க்கும் மேற்பட்ட காளைகளும், 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் செல்வராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். போட்டியின் முதல் காளைகளாக போட்டியை நடத்து 4  கிராமங்களின் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

jallikkattu

தொடர்ந்து, வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன. வாடிவாசல் வழியே சீறிப்பாய்ந்து வந்த சில காளைகள், இளைஞர்களை கலங்கடிக்கும் விதமாக களத்தில் நின்று விளையாடின. சில காளைகளை இளைஞர்கள் தீரமுடன் திமிலைப்பிடித்து அடக்கினர். போட்டியில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு தங்கக்காசுகள், வெள்ளிக்காசுகள், ரொக்கப்பணம், கட்டில், பாத்திரங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.