தேனியில் மஞ்சள் வியாபாரி வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை... மர்மநபர்கள் கைவரிசை!

 
robbery

தேனியில் மஞ்சள் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி பங்கஜம் ஹவுஸ் தெருவை சேர்ந்தவர் ராஜாராம் (75). இவர் மஞ்சள் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் ராஜாராம் தனது குடும்பத்துடன் தூத்துக்குடியில் உள்ள மகள் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். இந்த நிலையில், நேற்று காலை வேலைக்கார பெண் பணிக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வேலைக்கார பெண், ராஜாராமுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். 

theni

இதனை அடுத்து, ராஜாராம் உடனடியாக தேனிக்கு வந்து பார்த்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 60 பவுன் நகைகள் திருடப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து ராஜாராம்  தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.