அவினாசியில் வியாபாரி வீட்டில் 60 பவுன் நகை, ரூ.6 லட்சம் பணம் கொள்ளை... திருப்பூர் மாவட்ட எஸ்.பி நேரில் விசாரணை!

 
robbery

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வியாபாரி வீட்டின் கதவை உடைத்து 60 பவுன் நகை, ரூ.6 லட்சம் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

திருப்பூர் மாவட்டம் அவினாசி ராஜாஜி வீதியை சேர்ந்தவர் அப்துல் வகாப் (52). இவர் திருப்பூரில் ஸ்டேசனரி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு உறவினரின் துக்க நிகழ்ச்சிக்காக அப்துல் வகாப், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கர்நாடக மாநிலம் மைசூருக்கு சென்றிருந்தார். தொடர்ந்து, நேற்று மாலை குடும்பத்துடன் அவினாசிக்கு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

avinashi

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்துல் வகாப் மற்றும் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பீரோக்களை உடைத்து, உள்ளே இருந்த 60 பவுன் நகை மற்றும் ரூ.6 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து அப்துல் வகாப் அவினாசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில், மாவட்ட எஸ்பி சசாங்சாய், அவினாசி டிஎஸ்பி பவுல்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளும் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த கொள்ளை சம்பவம் குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.